நான் தான் மலாலா என்று மொத்த பாகிஸ்தானில் உள்ள பெண்கள் தலிபானுக்கு எதிராக போர்கொடி தூக்கியிருக்கிறார்கள். யார் இந்த மலாலா? பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட் என்ற மாநிலத்தில் உள்ள மிங்கோரா எனும் இடத்த்தில் ஒன்பதாவது படிக்கும் மாணவி. 2009ல் தலிபானால் பெண்கள் படிக்கக் கூடாது என்று தடை விதித்த காலத்தில் தடை விதித்த தலிபான்களை ஆட்சியை எதிர்த்து பிபிசிக்காக உருது மொழியில் ப்ளாகில் பெண்களின் கல்விக்காக எழுதியிருக்கிறாள்.அந்த கட்டுரைக்காக பாகிஸ்தான் அரசு, முதல் National Youth Peace Prize கொடுத்து கவுரவித்து இருக்கிறது. அவளை எழுதக்கூடாது என்று அவளுக்கும் அவளது குடும்பத்தினருக்கும் தலிபான்கள் மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்க, ஒரு கட்டத்த்தில் பாகிஸ்தான் அரசாங்கம் அந்த மாநிலத்தில் தலிபான்கள் மீது அட்டாக் செய்து அவர்களை ஒழித்துவிட்டதாக பிரகடனப்படுத்த, மீண்டும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த மலாலாவின் பள்ளி வேனை ஒருவன் வழிமறித்து, ‘யார் இங்கே மலாலா? சொல்லாவிட்டால் எல்லாரையும் சுட்டுவிடுவேன்” என்று மிரட்டி, மலாலாவை கண்டுபிடித்து அவளது தலையிலும், கழுத்திலும் சுடப்பட்டாள். அவளுடன் மேலும் இரண்டு பெண்கள் குண்டடிப்பட்டு காயத்துடன் தப்பியிருக்கிறார்கள். இது நடந்தது கடந்த அக்டோபர் மாதம் 12ஆம் தேதி. மலாலாவின் சிகிச்சைக்காக ஆகும் செலவை அரசாங்கமே ஏற்று அவளை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் மலாலாவுக்கும், அவளது தந்தைக்கும் ஃபத்வா விதித்திருகிறது தலிபான். அவள் உயிர் பெற்று வந்தால் மீண்டும் அவளை கொல்வோம் என்று சொல்லியிருக்கிறார்கள் தலிபான்கள். இந்த வெறி பிடித்த மதவாதிகளை தனியொரு பெண்ணாய் எதிர்த்தது இப்போது ஒரு பெரிய வேள்வியாய் மாறி நாட்டின் உள்ள அத்துனை பெண்களும் நான் தான் மலாலா வா.. வீரத்தோடு போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். யாரையும், எப்போதும், எந்நேரமும் மதத்தின் பெயரால் அடக்கி வைக்க முடியாது என்பது மீண்டும் நிருபணமாக்கியிருக்கிறாள் இந்த பதினைந்து வயது மலாலா.
